கொடிவேரி அணையில் திருவிழா போன்று குவிந்த சுற்றுலா பயணிகள்
ஈரோடு, 26 ஏப்ரல் (ஹி.ச.) ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள இந்த அணையில் நீர் அருவி போல கொட்டுவதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வத
கொடிவேரி அணை


ஈரோடு, 26 ஏப்ரல் (ஹி.ச.)

ஈரோடு மாவட்டம்,கோபிசெட்டிபாளையம் அருகே அமைந்துள்ள இந்த அணையில் நீர் அருவி போல கொட்டுவதால், பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்வது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் ஆர்வம் அதிகரித்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து, மதியத்திற்கு முன்பாகவே 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொடிவேரி அணையில் திரண்டனர்.

அணையில் அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும், பூங்கா பகுதியில் குழந்தைகளுடன் விளையாடியும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நேரத்தை கழித்தனர்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த போதிலும், அருவியில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் வெளியேற விருப்பம் இல்லாமல் நீண்ட நேரம் தங்கியிருந்தனர்.

மேலும், நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருவதால், பெண்கள் பாதுகாப்பாக குளிப்பதற்கும் உடை மாற்றும் அறைகள், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகளை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam