Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், மாபெரும் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் தயாரிப்பு கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை என மதுரை எம்பி சு.வெங்கடேசன் மதுரையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
குறிப்பாக சித்திரை வீதிகள் மற்றும் கோயிலின் வெளிப்புற குறுக்கு வீதிகளில் அதிகளவில் நிழற்பந்தல்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் முதலுதவி வசதிகள் அதிகப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவின் போது வைகை ஆற்றின் வடகரையில் மக்கள் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
தற்போதைய கடும் வெயில் மற்றும் புதிய தார்ச்சாலைகளின் காரணமாக, குறிப்பாக குழந்தைகளுடன் வரும் பொதுமக்கள் சிரமம் அனுபவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். எனவே வடகரை சாலையில் அதிகளவில் நிழற்பந்தல்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.
வழக்கத்தை விட மேலும் சிறப்பாக சித்திரைத் திருவிழா நடைபெற, மாவட்ட நிர்வாகம், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து கூடுதல் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என எம்பி சு.வெங்கடேசன் கேட்டுக்கொண்டார்.
Hindusthan Samachar / P YUVARAJ