முதுமலை அருகே புலிகள் நடமாட்டம் - வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறை அறிவுரை
நீலகிரி, 26 ஏப்ரல் (ஹி.ச.) நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் அடிக்கடி புலிகள் சாலையை கடந்து நீர்நிலைகளை தேடிச் செல்கின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் சபாரி செல்லும் சுற்றுலா
Mudumalai


நீலகிரி, 26 ஏப்ரல் (ஹி.ச.)

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள மசினகுடியில் இருந்து மாயார் செல்லக்கூடிய சாலையில் அடிக்கடி புலிகள் சாலையை கடந்து நீர்நிலைகளை தேடிச் செல்கின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் மற்றும் சபாரி செல்லும் சுற்றுலா பயணிகள் புலிகளை பார்த்து வியப்படைகின்றனர். அதே நேரம் சாலையில் வாகனங்கள் வருவதை கண்டால் புலிகள் சாலையை கடந்து மறு பகுதிக்கு செல்ல தயங்குகின்றன.

நேற்று மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி சாலை கடக்க முயற்சிக்கும்போது வாகனங்கள் இருப்பதைக் கண்டு பின்னோக்கி நடந்து சென்று வனப்பகுதிக்குள் சென்றது.

மற்றொரு இடத்தில் வாகனங்கள் வருவதை கண்ட புலி கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையில் மின்னல் வேகத்தில் கடந்து வனப்பகுதிக்குள் ஓடியது.

எனவே புலிகள் அடிக்கடி சாலைகளை கடந்து வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிக கவனமுடன் செல்ல வேண்டும் எனவும் புலிகளை கண்டால் வாகனங்களை நிறுத்தி செல்பி புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் எனவும் இரு சக்கர வாகனத்தில் செல்வோர் மிக கவனமுடன் செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சாலையில் இருவேறு இடங்களில் இரண்டு புலிகள் தென்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி ஆச்சரியத்திற்குள்ளாக்கியது.

Hindusthan Samachar / ANANDHAN