Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
கோவையில் 18 ஏக்கரில், 31 துறைகளுடன் இயங்கி வரும் அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமின்றி நீலகிரி திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட ஆறு மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 7000 முதல் 9000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெறுகின்றனர். உள்நோயாளிகள் 1,500 பேர் வரை சிகிச்சை பெறுகின்றனர்.
இதுதவிர, மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ பணியாளர்கள் என, கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் தினசரி வந்து செல்லும் இடமாக உள்ளது. ஆனால் இந்த வளாகத்தில் பிரத்யேக பார்க்கிங் வசதி இல்லை.
தீவிர சிகிச்சை பிரிவு, டீன் அலுவலகம், போர்டு ஹால் உள்ளிட்ட இடங்களில்தான் வண்டி நிறுத்த வேண்டியுள்ளது. இடநெருக்கடியால் ஆம்புலன்சுகள் உள்ளே வந்து செல்வதிலும் சிரமம் உள்ளது.
இது குறித்து மருத்துவமனை ஆர்.எம்.ஓ., சண்முகபிரியா கூறுகையில்,
ரோடு போடும் பணிகள் முடிந்ததும், பார்க்கிங் வசதிக்கான இடம் தேர்வு செய்யப்படும். மருத்துவ பணியாளர்களின் வாகனங்களை உள்ளே நிறுத்தும் அளவுக்கு மட்டுமே இடவசதி இருக்கிறது.
நோயாளிகள், அவர்களை காண வருவோரின் இரு சக்கர வாகனங்களை மட்டும், அருகேயுள்ள மாநகராட்சி பார்க்கிங்கில் நிறுத்தி கொள்ளலாம். உள்நோயாளிகளுக்கான அட்டெண்டர் பாஸ் அல்லது ஓ.பி., டிக்கெட் காண்பித்து, வாகனங்களை இலவசமாக நிறுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது சிமென்ட் ரோடு போடும் பணி நடப்பதால், ஆங்காங்கே நிறுத்தப்படும் கார்களை கடந்து, ஸ்ட்ரெச்சரில் இருந்து நோயாளிகளை வேறு இடங்களுக்கு கொண்டு செல்ல முடியாமல், மருத்துவ பணியாளர்கள் சிரமப்படுகின்றனர்.
மருத்துவர்களின் கார்களை நிறுத்த இடப்பற்றாக்குறை நீடிக்கிறது. மல்டி லெவல் பார்க்கிங் அமைப்பதே தீர்வு. இதற்கு மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b