வள்ளுவர்கோட்டத்தில் தயாரிப்பாளர் சங்க கூட்டம்- மே 2 வேலை நிறுத்தம் அறிவிப்பு
சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.) சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்க்குமரன், கலைப்புலி தாணு, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பல்வ
Pro


சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழ்க்குமரன், கலைப்புலி தாணு, எஸ்.ஏ. சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

தயாரிப்பாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சினிமா துறையின் தற்போதைய பொருளாதார நிலை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

வருகிற மே 2ஆம் தேதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள அரசு மானியத் தொகையை உடனடியாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

OTT மற்றும் சாட்டிலைட் வருவாய் குறைந்து வரும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இனி நடுத்தர மற்றும் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் Revenue Share முறையில் மட்டுமே தயாரிக்கப்படும் எனவும், நடிகர்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் தயாரிப்பாளர்களின் நஷ்டங்களில் பங்கெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் தொடர் வேலைநிறுத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. திரையரங்குகளில் வெளியீட்டிற்காக 8 வாரங்கள் OTT வெளியீட்டை தாமதப்படுத்தும் நிபந்தனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மே 10, 2026 அன்று தென்னிந்திய தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாகவும், தேவையான பட்சத்தில் நான்கு மாநிலங்களிலும் திரைப்பட வெளியீட்டை நிறுத்தும் முடிவு எடுக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சங்க அனுமதி இல்லாமல் OTT ஒப்பந்தங்களில் ஈடுபடும் தயாரிப்பாளர்களுக்கு தொழில்துறை ஒத்துழைப்பு வழங்கப்படாது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், சங்கத்தின் செயல்பாடுகளை உறுப்பினர்களுக்கு அறியச் செய்ய “தமிழ்சினிமா செய்திமலர்” என்ற மாத இதழ் தொடங்கவும், தயாரிப்பாளர்கள் தங்களது படங்களை விளம்பரம் செய்ய YouTube சேனல் ஆரம்பிக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த தீர்மானங்கள், தற்போதைய சினிமா துறையின் சவால்களை எதிர்கொள்ள தயாரிப்பாளர்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கைகளாக பார்க்கப்படுகின்றன.

Hindusthan Samachar / P YUVARAJ