Enter your Email Address to subscribe to our newsletters

விழுப்புரம், 26 ஏப்ரல் (ஹி.ச.)
கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு, திருநங்கைகளுக்கான அழகிப்போட்டி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் இன்று மற்றும் நாளை விழுப்புரத்தில் நடைபெறுகின்றன.
இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிமாநிலங்களிலிருந்தும் ஏராளமான திருநங்கைகள் விழுப்புரத்திற்கு வருகை தந்துள்ளனர்.
அவர்களை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் அழகிப்போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, இன்று மாலை 6 மணியளவில் விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிறந்து விளங்கும் திருநங்கைகளின் அணிவகுப்பு, “மிஸ் திருநங்கை” அழகிப்போட்டி தேர்வு, நடன நிகழ்ச்சிகள் மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதனைத் தொடர்ந்து, தென்னிந்திய திருநங்கையர் கூட்டமைப்பு சார்பில் நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் “மிஸ் கூவாகம்” அழகிப்போட்டியின் முதல் சுற்று நடைபெறுகிறது.
பின்னர் மாலை 6 மணிக்கு புதிய பஸ் நிலையம் அருகிலுள்ள நகராட்சி திடலில் இறுதிச்சுற்று போட்டி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சிகள் திருநங்கைகளின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவும் அமைகின்றன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA