அரசுப் பேருந்து படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி - காவல்துறை விசாரணை
தென்காசி, 26 ஏப்ரல் (ஹி.ச.) தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தில் ஏறும்போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில்
விபத்து


தென்காசி, 26 ஏப்ரல் (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தில் ஏறும்போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான சிசிடி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள மேட்டூர் பகுதியைச் சேர்ந்த சுப்பம்மாள் (70), திருநெல்வேலி செல்லுவதற்காக அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தார். அப்போது அந்த வழியாக திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து ஒன்று வந்தது.

பேருந்து நிறுத்தத்தில் நின்ற அந்த பேருந்தில் சுப்பம்மாள் ஏற முயன்றார். வயது முதிர்வு காரணமாக படிக்கட்டில் ஏற அவருக்கு சிரமம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் முழுமையாக பேருந்தில் ஏறுவதற்கு முன்பே, ஓட்டுநர் பேருந்தை இயக்கியதாக தெரிகிறது.

இதனால் நிலைதடுமாறிய சுப்பம்மாள், பேருந்தின் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த சிசிடி காட்சிகள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சிசிடி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், பேருந்து ஓட்டுநரின் அலட்சியம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P