Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 26 ஏப்ரல் (ஹி.ச.)
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகாவில் உள்ள அரசத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அடுத்தகுடி கண்மாய்கரை பகுதியில், பல ஆண்டுகளாகக் குடிநீர் வசதி இல்லாமல் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இப்பகுதியில், குடிநீருக்காக மக்கள் அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடம் தண்ணீரை ரூ.15 முதல் ரூ.20 வரை கொடுத்து வாங்கும் சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், ஒரு கிலோமீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதுவும் பெரும்பாலும் இரவு நேரங்களில் மட்டுமே தண்ணீர் விடப்படுவதால், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பாதுகாப்பற்ற சூழலில் தண்ணீர் எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
அருகில் உள்ள கண்மாய் நீரைப் பயன்படுத்தினால் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும், அதனால் அந்த நீரை எதற்கும் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஏழை மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் தினசரி தண்ணீருக்காக அதிக செலவு செய்ய வேண்டியுள்ளதால், மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்குதடையின்றி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam