திருச்செந்தூரில் பக்தர்கள் வெள்ளம்-5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருச்செந்தூர், 26 ஏப்ரல் (ஹி.ச.) அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்
திருச்செந்தூர்


திருச்செந்தூர், 26 ஏப்ரல் (ஹி.ச.)

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாகவும், சிறந்த பரிகார ஸ்தலமாகவும் விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கோடை விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதையொட்டி இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

இதனால் கோவில் வளாகம் திருவிழா நாட்களைப் போல பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

கடற்கரையை ஒட்டிய அமைப்பும், ஆன்மிக முக்கியத்துவமும் கொண்ட இந்த திருத்தலத்திற்கு தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.

கோடை விடுமுறை காரணமாக குடும்பத்துடன் வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

இன்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை பக்தி பரவசத்துடன் தரிசித்தனர்.

பக்தர்கள் முதலில் கடலில் புனித நீராடி, பின்னர் நாழிக்கிணற்றில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு கோவிலுக்குள் சென்றனர். நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

கூட்ட நெரிசல் காரணமாக கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் நிரம்பியிருந்தது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் திரண்டதால், திருச்செந்தூர் நகரின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்கை பேண காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P