Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 26 ஏப்ரல் (ஹி.ச.)
திருச்சி மாநகரில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் அட்டூழியம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி புத்தூர் பகுதியில் உள்ள வி.என்.பி. தெருவில் வசித்து வரும் சந்துரு என்பவரது வீட்டின் முன்பு, சில இளைஞர்கள் முதலில் மது போதையில் அமர்ந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை சந்துரு கண்டித்து அவர்களை அங்கிருந்து அனுப்பியுள்ளார்.
ஆனால், அதனை தொடர்ந்து அதே இளைஞர்கள் மீண்டும் கஞ்சா போதையில் சந்துருவின் வீட்டிற்கு வந்து, தகாத வார்த்தைகளால் திட்டி தாக்குதல் நடத்தினர். அப்போது அப்பகுதி மக்கள் உடனடியாக தலையிட்டு அவர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் பெறப்பட்டதும், திருச்சி மாநகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இருதரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கஞ்சா போதையில் இளைஞர்கள் அட்டூழியம் செய்து தாக்குதல் நடத்தும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
குடியிருப்பு பகுதிகளில் இவ்வாறு போதைப்பொருள் பயன்பாட்டுடன் இளைஞர்கள் ரகளையில் ஈடுபடுவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இத்தகைய சம்பவங்களை தடுக்க போலீசார் “இரும்புக்கரம்” கொண்டு செயல்பட வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam