Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து, டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை அரும்பாக்கத்தில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் அவசர செயற்குழு கூட்டம், வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நாளன்று கடலூர் மாவட்டம் நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி தொகுதிகளில் திமுக ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டினார்.
இந்த தாக்குதல்களில் பொதுமக்களின் வீடுகள் மற்றும் கார்கள் சேதமடைந்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதல் தொடர்பாக ஆதாரங்களுடன் புகார் அளித்தும், காவல்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார்.
மேலும், தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் மீது பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய அவர், தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், டிஜிபி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவோம் என எச்சரித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இருவரும் ஒன்றிணைய வேண்டும் என்பது தனது விருப்பம் எனவும், சமூக நீதி நோக்கத்தில் செயல்படும் இயக்கம் பிளவுபடுவது சரியல்ல என்றும் கருத்து தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ