Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்திரைப் பெருந்திருவிழாவை முன்னிட்டு திருத்தேரோட்டம் இன்று பக்தி உற்சாகத்துடன் நடைபெற்றது.
மிகவும் பிரசித்தி பெற்ற வள்ளியூர் குடவரைக்கோவிலான இத்தலத்தில் “வள்ளியூருறை பெருமானே” என அருணகிரிநாதர் பாடியுள்ள சிறப்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.
கடந்த 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரைப் பெருந்திருவிழா, பத்து நாட்கள் நடைபெறும் நிலையில், தினமும் மாலை வேளைகளில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான 9ஆம் நாள் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் திருக்கோவிலில் இருந்து மேளதாளங்களுடன் புறப்பட்டு தேரடிக்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்குப் பின், அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சுவாமி எழுந்தருளினார்.
இதனைத் தொடர்ந்து, திரளான பக்தர்கள் “வள்ளியூர் முருகனுக்கு அரோகரா” என பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகளிலும் அசைந்தாடி வந்த திருத்தேரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
மேலும், மாணவ-மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்டவை விழாவிற்கு வண்ணம் சேர்த்தன. கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்க, பக்தர்களுக்கு நீர்மோர், குளிர்பானங்கள் மற்றும் குடிநீர் தாராளமாக வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினரும், இந்துசமய அறநிலையத்துறையினரும் சிறப்பாக மேற்கொண்டிருந்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam