Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 26 ஏப்ரல் (ஹி.ச.)
கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் குழந்தைகளுக்கு வைரஸ் தொற்றுகள் எளிதாக பரவும் அபாயம் இருப்பதால் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக தட்டம்மை பாதிப்பு சென்னையில் கணிசமாக பதிவாகி வரும் நிலையில் சரியான நேரத்தில் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு செலுத்த மருத்துவகள் வலியுறுத்தி உள்ளனர்.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் சோமசுந்தரம் கூறியதாவது:
மாநிலத்தின் நோய்த்தடுப்பு விகிதம் 99 சதவீதமாக உள்ளது. 9 மற்றும் 18 மாதங்களில் செலுத்தப்படும் தட்டம்மை-ரூபெல்லா தடுப்பூசி 85 சதவீதம் செயல்திறன் கொண்டது மற்றும் போதுமான பாதுகாப்பை வழங்குகிறது.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது தட்டம்மை பாதிப்பில் பெரிய உயர்வு எதுவும் இல்லை தட்டம்மை பாதிப்புகள் இருந்தாலும் அவை ஒரு குறிப்பிட்ட குழுவாகவோ அல்லது தொகுப்பாகவோ இல்லை.
ஆனாலும், இதுபோன்ற பாதிப்புகளை தடுக்க தடுப்பூசியே பிரதானமான ஒன்றாகும். அதேபோல் குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளை கொடுப்பது அவசியமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து குழந்தை நல மருத்துவர்கள் கூறியதாவது:
சமீபகாலமாக இந்த பாதிப்புகளுடன் வரும் குழந்தைகள் கொரோனா காலத்தில் 9 மற்றும் 15 மாதங்களில் செலுத்த வேண்டிய தட்டம்மை, ரூபெல்லா தடுப்பூசியின் முதல் அல்லது இரண்டாவது டோஸைத் தவறவிட்டவர்களாக உள்ளனர்.
அதேபோல், பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையை முழுமையாகப் பின்பற்றாத பெற்றோரின் குழந்தைகளுக்கே இந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட்டுள்ளன. மேலும், பாதி தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் தட்டம்மையால் பாதிக்கப்பட்ட மற்றொரு குழந்தையுடன் தொடர்பில் வரும்போது, அவர்களுக்கும் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படுகிறது. மேலும் தடுப்பூசி அட்டவணையைப் பின்பற்றுவது முக்கியமாகும்.
இந்த தட்டம்மை காய்ச்சல் குறைந்த பின்னரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை உடனடியாக வெளியில் அழைத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
குழந்தைகள் தாராளமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் ஒன்று முதல் இரண்டு வாரங்கள் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும். தட்டம்மைக்குப் பிறகு வைட்டமின் ஏ சத்து வழங்குவது முக்கியம். ஒட்டுமொத்தமாக தடுப்பூசி போடுவதே முதல் தடுப்பு நடவடிக்கையாகும்.
ஒரு குழந்தைக்குத் தட்டம்மை ஏற்பட்டால், இருமல் மூலம் பரவும் தொற்றுத் துகள்களிலிருந்து மற்ற குழந்தைகளை பாதுகாக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்கி போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
காய்ச்சலைத் தவிர, இதற்கு என்று குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், சில குழந்தைகளுக்கு நிமோனியா மற்றும் காது தொற்று போன்ற சிக்கல்கள் ஏற்படலாம்.
எனவே பெற்றோர்கள் சரியான நேரத்தில் குழந்தைகளுக்கான தடுப்பூசியை செலுத்த வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b