Enter your Email Address to subscribe to our newsletters

செங்கல்பட்டு, 26 ஏப்ரல் (ஹி.ச.)
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட ஆலம்பரைக்குப்பத்தில் கழிவெளிநீர், கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் மற்றும் ஓங்கூர் ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் ஆலம்பரைக்குப்பம் பகுதியில் உள்ள முகத்துவாரம் வழியாக கடலில் கலந்து வருகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக முகத்துவாரம் பகுதியில் தொடர் நீரோட்டம் இருப்பதால், வேகம் மற்றும் நீரோட்டத்தின் திசை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, பழைய முகத்துவாரம் பகுதியில் தெற்கு பகுதியில் இருந்து வடக்கு நோக்கி 80 மீட்டர் தொலைவிற்கு முகத்துவாரம் பகுதி நகர்ந்து வருகிறது. இதனால் மீனவர்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால், கடப்பாக்கம் கடற்கரைப்பகுதி முழுதும் மண் அரிப்பு ஏற்பட்டு படகு நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்பு உள்ளது.
எனவே, மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மண் அரிப்பைத் தடுக்க முகத்துவாரம் பகுதியில் பாறைகள் கொட்டி தடுப்பு அமைக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b