Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி. ஜெயக்குமார் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சொத்து மறைப்பு குறித்த வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராயபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜெயக்குமார் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து விவரங்கள் முறையாக குறிப்பிடப்படவில்லை என்று கூறி, தேர்தல் ஆணையமும் வருமான வரித்துறையும் விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டது.
2021-ல் சுமார் ₹39.14 லட்சம் என இருந்த சொத்து மதிப்பு, 2026-ல் ₹70.73 லட்சமாக உயர்ந்திருந்தாலும், அதன் விவரங்கள் முழுமையாக அளிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
இதேபோல், விழுப்புரம் மாவட்டம் மைலம் தொகுதியில் போட்டியிட்ட சி.வி. சண்முகத்தின் வேட்புமனுவிலும் சொத்து உயர்வு தொடர்பான விவரங்கள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதாகக் கூறி வழக்கு தொடரப்பட்டது.
2021-ல் சுமார் ₹12.08 லட்சமாக இருந்த அசையும் சொத்துக்கள், 2026-ல் ₹60.64 லட்சமாக அதிகரித்துள்ளதாகவும், வருமானத்துடன் ஒப்பிடும்போது இந்த உயர்வு நியாயமில்லை என மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு, இதே போன்ற கோரிக்கைகளில் முன்பே வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை குறிப்பிட்டு, இவ்வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Hindusthan Samachar / GOKILA arumugam