Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
அன்புமணி ராமதாஸ், மேகதாது அணை தொடர்பான விவாதம் ஒருசார்பாக நடைபெற்று முடிவெடுக்கப்படும் ஆபத்து இருப்பதாகக் கூறி, காவிரி மேலாண்மை ஆணையம் நடத்தவுள்ள 50-வது கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏப்ரல் 29-ஆம் தேதி தில்லியில் நடைபெறவுள்ள கூட்டத்தில், காவிரி நீர் பகிர்வு குறித்து மட்டும் விவாதிக்கப்படுமானால் சிக்கல் இல்லை.
ஆனால், மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி பெறும் நோக்கில் கர்நாடக அரசு முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் முழு அதிகாரம் பெற்ற அரசுகள் இல்லாத சூழலில் இக்கூட்டம் நடைபெறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கூட்டத்தில் பங்கேற்கும் அதிகாரிகளுக்கு தெளிவான அரசியல் வழிகாட்டுதல் இல்லாததால், தவறான நிலைப்பாடு எடுக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் எச்சரித்தார்.
மேகதாது அணை திட்டம் தொடர்பான விரிவான திட்ட அறிக்கை குறித்து முன்பே பல்வேறு எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், அது குறித்து மீண்டும் விவாதிக்கப்படுவது தமிழ்நாட்டின் பாசன விவசாயிகளின் நலன்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் கூறினார்.
எனவே, புதிய அரசுகள் பதவியேற்கும் வரை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும். ஒருவேளை கூட்டம் நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மேகதாது அணை விவகாரம் குறித்து எந்தவிதமான விவாதமும் நடைபெறாது என முன்கூட்டியே உறுதி அளிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ