மறைந்த அரசு ஓய்வூதியரின் உடல் தானம் - புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் நெகிழ்ச்சி
புதுக்கோட்டை, 27 ஏப்ரல் (ஹி.ச.) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கைவல்யம் சங்கரன்( 84) உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவரது வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்ற
Body Donation by Deceased Government Pensioner


புதுக்கோட்டை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த கைவல்யம் சங்கரன்( 84) உடல் நலக்குறைவால் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அவரது வயது மூப்பின் காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று 26.04.2026ல் இறந்து விட்டார்.

அவரது உடல் இன்று (27.04.2026) மருத்துவக் கல்லூரியில் முதல்வர் டாக்டர் கலைவாணி முன்னிலையில் மருத்துவக் குழுவினரிடம் மருத்துவ மாணவர்களுக்குப் பயனடையும் வகையில் ஒப்படைக்கப்பட்டது.

இது குறித்து கைவல்யத்தின் மகன் அறிவழகன் கூறுகையில்,

எனது தந்தை கைவல்யம் அவர்கள் கூட்டுறவுத்துறையில் சார்பதிவாளராகப் பணியில் சேர்ந்து பின்னர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராப் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். அவரது விருப்பம் தனது உடல் மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அதற்குக் காரணம் அவரது பணியின் போது நீண்ட காலம் புதுக்கோட்டையில் பணி புரிந்ததாலும் தனது இறுதி நிகழ்வானது எந்த வித சாதி மதச் சம்பிரதாயங்களும் சடங்குகளும் இல்லாமல் இருக்க வேண்டும் என்ற விருப்பமாகும்.

அவர் தந்தை பெரியாரின் கொள்கையால் ஈர்க்கப் பட்ட நிலையில் பகுத்தறிவாளராகவும் தமிழுணர்வாளராகவும் கடைசிவரை இருந்தார். எனக்கு அறிவழகன் என்றும் தங்கைக்கு மைவிழி என்றும் தம்பிக்கு அறிவழகன் என்றும் அழகிய தமிழ்ப் பெயரைச் சூட்டி வளர்த்து வந்தார்.

மூவரும் நல்ல நிலையில் இருக்கிறோம். இந்நிலையில்தான் அவர் இறந்து விட்டார். இதில் அவருடைய அனைத்துக்கும் துணையாக இருந்தது எங்களது தாயார் கலாவதி.இப்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் எங்களது தந்தையின் வழியைப் பின்பற்றித்தான் இருந்து வருகிறோம்.

உடல்தானம் செய்வதில் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு உடன்பாடு இல்லாமல் இருந்தது. ஆனால் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால் மருத்துவக் கல்லூரிக்கு இறுதி மரியாதை செய்ய அனைவரும் வந்திருந்தனர்.

எனது தந்தையின் உடலுக்கு மருத்துவத் துறையினர் கொடுத்த மரியாதையைப் பார்த்தவுடன் அனைவரும் வியப்படைந்ததோடு எங்களது குடும்பத்தினரைப் பாராட்டவும் செய்தனர்.

இதற்கெல்லாம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம்.அப்துல்லாவும் பெரும் பங்காற்றியிருக்கிறார். குறிப்பாக மருத்துவத் துறைக்கும் நாங்கள் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த உடல்தானம் குறித்து புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கலைவாணி கூறுகையில்,

ஒரு காலத்தில் மக்களுக்கு உடல்தானம் செய்வதில் விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வு ஏற்பட்டு உடல்தானம் செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.

2017ஆம் ஆண்டிலிருந்து இப்போதுவரை சுமார் 25உடல்கள் தானமாகப் பெற்றிருக்கிறோம். 15மாணவர்களுக்கு ஓர் உடல் அவர்களது கல்வி சார்ந்து தேவைப்படுகிறது. அந்த வகையில் உடல்தானம் செய்யும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இன்று உடல்தானமாகக் கிடைத்திருக்கும் கைவல்யத்தின் குடும்பத்தினர் அவர் இறந்து விட்டார் என்றவுடனேயே கண்தானம் செய்யச் சொன்னதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் கண்கள் இரண்டும் பெறப் பட்டு விட்டன. அந்தக் கண்களின் மூலம் இரண்டு பேருக்கு விழிகள் கிடைத்திருக்கின்றன.

அந்தக் கண்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு பார்வையை வழங்கிக் கொண்டிருக்கும். அந்த வகையில் அந்தக் குடும்பத்தினருக்கு இரண்டு வகையில் நன்றி தெரிவிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

உடல்தானம் செய்ய வந்த கைவல்யத்தின் குடும்பத்தினருடன் அவரது உறவினர்களும் நண்பர்களும் அரசியல் கட்சிப் பிரமுகர்களும் நூற்றுக் கணக்கில் வந்திருந்ததும் அவர்கள் முன்னிலையில் நூற்றுக் கணக்கான மருத்துவ மாணவர்கள் உடலைப் பெற்றுக் கொண்டதும் இரு தரப்பினரையும் நெகிழ்ச்சியடைச் செய்தது.

Hindusthan Samachar / vidya.b