Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் இன்று திங்கள்கிழமை ஒட்டு மொத்தமாக சென்னை திரும்பி வருகின்றனர்.
அவர்களில் பெரும்பாலானோர் சாலை மற்றும் ரயில்கள் மூலம் பயணம் செய்த நிலையில், விமானங்களில் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தது.
இதனால் நேற்று இரவில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய விமான நிலையங்களில் இருந்து சென்னை வரும் விமானங்களில் கூட்டம் அலைமோதியது. இதனால் பெரும்பாலான விமானங்களில் டிக்கெட்டுகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஓரிரு விமானங்களில் மட்டுமே டிக்கெட்கள் இருந்த நிலையில், அந்த டிக்கெட்களும் மூன்று மடங்கு விலை அதிகரித்து காணப்பட்டது.
அதன்படி, தூத்துக்குடி - சென்னை விமான கட்டணம் வழக்கமாக ரூ.5,354-ஆக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரூ.17,089 என இருந்தது. அதே போல், மதுரை - சென்னை விமான கட்டணம் வழக்கமாக ரூ.5099-ஆக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரூ.32,508 ஆக இருந்தது. மேலும் திருச்சி - சென்னை விமான கட்டணம் வழக்கமாக ரூ.4,551-ஆக இருந்த நிலையில், நேற்று இரவு முதல், இன்று காலை வரை ரூ.14,310-ஆக அதிகரித்து காணப்பட்டது.
கோயம்புத்தூர் - சென்னை விமான கட்டணம் வழக்கமாக ரூ.4,634-ஆக இருந்த நிலையில், நேற்று இரவு முதல் இன்று காலை வரை ரூ.11,149 வரை அதிகரித்தது.
விமான கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்தால் சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க சென்றவர்கள் பெரும் சிரமத்துடன் சென்னை திரும்ப வேண்டிய சூழல் நிலவியது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி நிறைவடைந்தது.
.இந்த தேர்தலில் இதுவரை இல்லாத அளவுக்கு மாநிலத்தில் 85.15 சதவீத வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி மே 4 ஆம் தேதி நடைபெறுகிறது.
.அதனை முன்னிட்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / ANANDHAN