Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
திருமுல்லைவாயல் பகுதியைச் சேர்ந்த சத்யா, அயனாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.
பணியிடத்தில் தரக்குறைவான பேச்சு மற்றும் அழுத்தம் காரணமாக கடந்த 3-ஆம் தேதி அவர் வேலையை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.
பின்னர் 13 நாட்கள் பணியாற்றியதற்கான சம்பளத்தை பெற கடந்த 24-ஆம் தேதி மருத்துவமனைக்கு சென்றபோது, ரூ.4,000 பணத்தை முகத்தில் எறிந்து, மீதமுள்ள தொகையை ஆன்லைனில் அனுப்புவதாக கூறியதாக தெரிகிறது.
இதற்கிடையில் மீதமுள்ள தொகையை வழங்குவதாக கூறி மீண்டும் அழைத்ததாகவும், அங்கு சென்ற சத்யாவை திட்டி தாக்கியதுடன் சர்ஜிக்கல் பிளேடால் காயப்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அங்கிருந்த ஊழியர்களை வைத்து கைகளை, கால்களை குளுகோஸ் டியூப்பால் கட்டி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
காயமடைந்த சத்யா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரது தலையில் தையல்கள் போடப்பட்டுள்ளதுடன், உடலில் உள் காயங்கள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அயனாவரம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மருத்துவமனை இயக்குனரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடந்தபோது சத்யா தனது அக்காவுக்கு செய்த தொலைபேசி அழைப்பின் ஆடியோ பதிவும் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனை நிர்வாகம் தரப்பில்,
சத்யா மதுபோதையில் வந்து தகராறு செய்ததாகவும், கூர்மையான ஆயுதத்தால் தாக்க முயன்றதால் அவரை கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்ததாகவும், தங்களும் தனியாக புகார் அளித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ