கொடிவேரி அணையில் முதல்போக பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி
ஈரோடு, 27 ஏப்ரல் (ஹி.ச.) கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையின் பாசனத்திற்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. ஆண்டுதோறும் இப்பகுதியில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வர
கொடிவேரி அணை


ஈரோடு, 27 ஏப்ரல் (ஹி.ச.)

கோபிசெட்டிபாளையம் அருகே கொடிவேரி அணையின் பாசனத்திற்குட்பட்ட அரக்கன்கோட்டை வாய்க்கால் பகுதியில் சுமார் 24 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் இப்பகுதியில் இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, ஏப்ரல் 27 முதல் ஆகஸ்ட் 24 வரை 120 நாட்களுக்கு, 8812 மில்லியன் கனஅடி அளவை மீறாமல் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.

அதன்படி, இன்று கொடிவேரி அணையில் தண்ணீர் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் மட்டுமே கலந்து கொண்டு எளிமையாக நிகழ்ச்சி நடைபெற்றது.

மங்கள வாத்திய இசையுடன் தடப்பள்ளி–அரக்கன்கோட்டை வாய்க்காலில் மதகு சட்டர் திறக்கப்பட்டு தண்ணீர் பாசனத்திற்காக விடப்பட்டது.முதற்கட்டமாக விநாடிக்கு 150 கனஅடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கோடை காலத்திலும் விவசாய நலனை கருத்தில் கொண்டு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நீர்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சுமார் 24,504 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam