Enter your Email Address to subscribe to our newsletters

கொல்கத்தா, 27 ஏப்ரல் (ஹி.ச.)
திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதில் முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு கடந்த 23-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த கட்டத்தில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.
முதல்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு 2-வது மற்றும் இறுதிக்கட்டமாக வருகிற புதன்கிழமை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது.
இதனால் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரசுக்கு ஆதரவாக அரவிந்த் கெஜ்ரிவால், தேஜஸ்வி யாதவ், ஹேமந்த் சோரன் ஆகியோர் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர்.
மறுபுறம் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தீவிரமாக பிரசாரம் செய்தனர்.
இதேபோல் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந் நிலையில், தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் பாங்கர் பகுதியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் ஒருவரின் வீட்டில் இருந்து சுமார் 100 நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
இந்த வெடிகுண்டுகள் வாக்குப்பதிவை சீர்குலைக்க பதுக்கி வைக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து, 2-ம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA