கூடங்குளம் அணுமின் நிலையத்தில் திடீர் தொழில்நுட்பக் கோளாறு
திருநெல்வேலி, 27 ஏப்ரல் (ஹி.ச.) திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த
Kudankulam


திருநெல்வேலி, 27 ஏப்ரல் (ஹி.ச.)

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுமின் நிலையத்தின் முதலாவது அணு உலையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வந்த மின் பகிர்வில் சரிவு ஏற்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ரஷ்ய நாட்டின் நிதி உதவியுடன் தலா 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் முதலாவது அணு உலையில் உள்ள கண்டன்சர் (Condenser) குளிர்விக்கும் நீர் இறைப்பானில் (Cooling Water Pump) திடீரென தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக மின் உற்பத்தி இன்று திடீரென்று நிறுத்தப்பட்டது.

முதலாவது அணு உலையின் மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 1000 மெகாவாட் மின் உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இரண்டு அணு உலைகளும் இயங்கும் போது தமிழகத்திற்கு வழக்கமாக 1,152 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். தற்போது முதலாவது உலை முடங்கியுள்ளதால், தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய மின்சாரத்தில் 576 மெகாவாட் குறைந்துள்ளது.

இரண்டாவது அணு உலை தொடர்ந்து இயங்கி வருவதால், அங்கிருந்து மட்டும் 1000 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

தொழில்நுட்பக் கோளாறு குறித்து தகவல் அறிந்தவுடன், அணுமின் நிலைய விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் குழுவினர் பழுதைச் சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கண்டன்சர் பகுதியில் ஏற்பட்டுள்ள நீர் இறைப்பாணி கோளாறைச் சரிசெய்து, மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பழுது நீக்கப்பட்டவுடன் இன்னும் ஓரிரு நாட்களில் முதலாவது அணு உலை மீண்டும் முழுத் திறனுடன் இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN