Enter your Email Address to subscribe to our newsletters

மயிலாடுதுறை, 27 ஏப்ரல் (.)
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையப் பகுதியில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய ஊழியர் மீது 6 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையத்தில் செந்தில் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார்.
இங்கு கடந்த 25ஆம் தேதி மாலை, அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவர் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் வாங்க வந்துள்ளார்.
அப்போது, உணவகத்தில் இருந்த சோயா சாஸை அதிகமாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உணவு தயாரிப்பு மாஸ்டர் ஆரோன் எச்சரித்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறிய நிலையில், உணவக ஊழியர்கள் அந்த சிறுவனை அங்கிருந்து வெளியேற்றினர்.
பின்னர், அந்த சிறுவன் தனது அண்ணன் பிரவீன் உள்ளிட்ட 6 பேர் கொண்ட கும்பலுடன் மீண்டும் உணவகத்துக்கு வந்து, அங்கிருந்த ஊழியர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, உணவு தயாரிப்பு மாஸ்டர் ஆரோன் மீது கையில் கிடைத்த பொருட்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. அவர் காயமடைந்த நிலையிலும், கும்பல் தொடர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. தடுக்க முயன்றவர்களும் தாக்குதலுக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 17 வயது சிறுவன் மற்றும் அவரது அண்ணன் பிரவீன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சிறுவன் தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்திற்கும், பிரவீன் நீதிமன்ற காவலில் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.
பிரவீன் மீது ஏற்கனவே கஞ்சா மற்றும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், தாக்குதலில் ஈடுபட்ட மற்ற நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தாக்குதல் நடத்தியவர்கள் போதையில் இருந்ததாகவும், சம்பவத்தின் போது உணவக மேஜையில் இருந்த செல்போனையும் திருடிச் சென்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பழைய பேருந்து நிலையம் போன்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில், காவல்துறை பாதுகாப்பு இருந்தபோதும் இத்தகைய சம்பவம் நடைபெற்றிருப்பது பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P