Enter your Email Address to subscribe to our newsletters

நெல்லை, 27 ஏப்ரல் (ஹி.ச.)
கோடை வெப்பம் அதிகரித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டம் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அதிகரித்து வருகிறது
அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் பகுதியில் பிரசித்தி பெற்ற அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது. இங்கு பொதிகை மலையில் உற்பத்தி ஆகும் வற்றாத ஜீவ நதியாக கருதப்படும் தாமிரபரணி நதி, ஆண்டு முழுவதும் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
தற்போது திருநெல்வேலி உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கோடையின் வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்பத்தை தணிக்க மக்கள் நீர் நிலைகளுக்கு படையெடுத்து வருகின்றனர். அதன்படி, திருநெல்வேலியில் உள்ள அகஸ்தியர் அருவிக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், அகஸ்தியர் அருவிக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து, ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது கார் மற்றும் வேன்களில் குடும்பத்தினருடன் வருகை தந்தனர்.
இதனிடையே, சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் பாபநாசம் சோதனைச்சாவடியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றது. மேலும் அகஸ்தியர் அருவிக்கு வரும் பொதுமக்கள் மதுபாட்டில்கள் மற்றும் வன விலங்குகளுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் உளளிட்ட பொருட்கள் எடுத்து செல்லவும் தடை விதிக்ககப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சோதனைச்சாவடியில் வனத்துறையினர் முழு சோதனை செய்த பின்னரே வாகனங்களை அருவிக்கு அனுப்பினர்.
கோடைக்காலங்களில் குளிர்ச்சியான அருவிகளில் பொதுமக்கள் பொழுதை கழிக்க விரும்புவர். அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மணிமுத்தாறு உள்ளிட்ட அருவிகள், சுற்றுலா தலங்களாக மாறிவிட்டன. அந்த வகையில் திருநெல்வேலி நகர்ப் பகுதிகளில் இருந்து எளிதாக சென்றடையும் வகையில் கேரள மாநில எல்லையில், அகஸ்தியர் அருவி அமைந்துள்ளது.
அகஸ்தியர் அருவியில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி வழங்கப்படுகிறது.
மேலும் அகஸ்தியர் அருவியில் பல உணவுக்கடைகள் உள்ளதால், அங்கு செல்வோர் குடும்பத்தினருடன் முழு நாளையும் செலவிட முடிகிறது.
அகஸ்தியர் அருவிக்கு கீழ் அமைந்துள்ள பாபநாச சுவாமி கோயில் அருகில் தலையணை அருவி அமைந்துள்ளது. ஆனால் இந்த அருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN