மருத்துவக் கழிவுகள் தீ வைத்து எரிக்கப்பட்ட விவகாரம் - 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
நெல்லை, 27 ஏப்ரல் (ஹி.ச.) நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, மர்ம நபர்கள் சிலர், பெரிய லாரி ஒன்றில் அதிக அளவில் மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி அதனை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் ஆட்கள
Medi wastage


நெல்லை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி அருகே உள்ள காட்டுப் பகுதியில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி, மர்ம நபர்கள் சிலர், பெரிய லாரி ஒன்றில் அதிக அளவில் மருத்துவக் கழிவுகளைக் கொண்டு வந்து கொட்டி அதனை தீ வைத்து எரித்துள்ளனர். பின்னர் ஆட்கள் வருவதை பார்த்த மர்ம நபர்கள் அங்கிருந்து உடனடியாக தங்களது வண்டியில் தப்பிச் சென்றுள்ளனர்.

இது குறித்து அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் சிவந்திபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். மேலும் சிவந்திபட்டி கிராம நிர்வாக அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் தொடங்கிய விசாரணையில், காவல் துறையினர் அங்கு தீ வைத்து எரிக்கப்பட்ட கழிவுகள், மருத்துவக் கழிவுகளாக இருக்கலாம் என கண்டுபிடித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக சிவந்திப்பட்டி காவல் துறையினர் சுற்றுச்சூழல் சுகாதாரத்தை சீரழிப்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மருத்துவக் கழிவுகள் எரிக்கப்பட்டதாக பரவிய தகவலின் காரணமாக சிவந்திபட்டி பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். சிவந்திப்பட்டியில் தேர்தல் நாளன்று ஆள் நடமாட்டம் குறைவாக இருந்ததை பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த கழிவுகளை கொட்டியதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே திருநெல்வேலி மாவட்டம் சித்தமல்லி, கோடகநல்லூர் ஆகிய பகுதிகளில் கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. கேரளா மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், இரு மாநில அரசுகள் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவக் கழிவுகள் மீண்டும் பாதுகாப்புடன் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டில் பொது இடங்களில் மருத்துவக் கழிவுகளை முறையற்ற முறையில் குவித்தாலோ அல்லது அண்டை மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து கொட்டினாலோ சம்பந்தப்பட்டவர்களை மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வகை செய்யும் சட்டத்திருத்தத்தை தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை மாதம் கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

Hindusthan Samachar / ANANDHAN