Enter your Email Address to subscribe to our newsletters

லடாக், 27 ஏப்ரல் (ஹி.ச.)
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஏப்ரல் 30-ந்தேதி 2 நாள் பயணமாக லடாக் செல்ல உள்ளார்.
மே 1-ந்தேதி புத்த பூர்ணிமா தினத்தையொட்டி புத்த பகவானின் புனிதப் பொருட்களுக்கு அவர் மரியாதை செலுத்துவார் என லடாக் துணை நிலை கவர்னர் வினய் குமார் சக்சேனா தெரிவித்தார்.
இந்த நிலையில், லடாக் பிராந்தியத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக துணைக்குழுக் கூட்டத்தை மே 22-ந்தேதி நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்திலும் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், இந்த துணைக்குழுக் கூட்டம் மட்டும் லடாக் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதுமானதாக இருக்காது என லே உச்ச அமைப்பு தெரிவித்துள்ளது.
எனவே, அடுத்த வாரம் லடாக் வர உள்ள அமித்ஷா தங்களுடன் நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்குதல், அரசியலமைப்பின் 6-வது அட்டவணையின் கீழ் பாதுகாப்பு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகள் குறித்து, லடாக் தலைவர்கள் மற்றும் கார்கில் ஜனநாயகக் கூட்டணி இணைந்து 2021 முதல் மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA