ஆம் ஆத்மி கட்சியின் 7 எம்.பி.க்கள் பா.ஜ.க-வில் இணைந்தனர்
புதுடெல்லி, 27 ஏப்ரல் (ஹி.ச.) அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேர் விலகி பா.ஜனதாவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மொத
B


புதுடெல்லி, 27 ஏப்ரல் (ஹி.ச.)

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 7 பேர் விலகி பா.ஜனதாவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சிக்கு மாநிலங்களவையில் மொத்தம் 10 உறுப்பினர்கள் இருந்தனர்.

இதில் முக்கிய தலைவராக விளங்கிய ராகவ் சத்தா, கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவராக பணியாற்றி வந்தார்.

நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்று வந்த அவர், சமீப காலமாக கட்சித் தலைமையுடன் கருத்து வேறுபாடு காரணமாக மோதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அவரை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கியதுடன், விவாதங்களில் பங்கேற்பதற்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ராகவ் சத்தா, கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

அவருடன் மேலும் 6 எம்.பி.க்களும் விலகினர்.

அதன்படி ராகவ் சத்தா, சந்தீப் பதக், அசோக் மிட்டல், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், சுவாதி மலிவால், ராஜிந்தர் குப்தா, விக்ரம் சானி ஆகிய 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகினர்.

பின்னர், பஞ்சாப்பைச் சேர்ந்த இவர்களை பா.ஜனதா தலைமையகத்தில் கட்சியின் தலைவர்கள் வரவேற்றனர்.

இந்த நிலையில், அவர்கள் பா.ஜனதாவில் இணைந்ததற்கு மாநிலங்களவை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஒப்புதல் அளித்ததாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் மாநிலங்களவையில் பா.ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 106-இல் இருந்து 113 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கிரண் ரிஜிஜு வெளியிட்ட பதிவில், “இந்த 7 பேரும் நாடாளுமன்ற மரபுகளுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடாதவர்கள்.

பிரதமர் மோடியின் தலைமையில் நாட்டை முன்னேற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இவர்களை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாநிலங்களவையில் ஆம் ஆத்மி கட்சியின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்.பி.க்கள் விலகியுள்ளதால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் அவர்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA