தஞ்சை பெரிய கோவில் சித்திரை தேரோட்டம் கோலாகலம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தஞ்சை, 27 ஏப்ரல் (ஹி.ச.) தஞ்சை பெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவில், தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா ஆண்டுதோறு
T


தஞ்சை, 27 ஏப்ரல் (ஹி.ச.)

தஞ்சை பெருவுடையார் கோவில் எனப்படும் தஞ்சை பெரிய கோவில், தமிழர்களின் கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது.

இங்கு நடைபெறும் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

15 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், பல்லக்கு, சிம்மம், மேஷம், வெள்ளி மயில், சந்திர பிரபை, முத்துப்பல்லக்கு, பூதம், வெள்ளி யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வருகிறது.

மேலும் தினமும் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது.

இதையொட்டி காலை 5 மணியளவில் தியாகராஜர், ஸ்கந்தர், கமலாம்பாள் புறப்பாடும், முத்துமணி அலங்கார சப்பரத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெற்றது.

பின்னர் தேரில் தியாகராஜர், கமலாம்பாள் எழுந்தருளினர்.

தொடர்ந்து காலை 6.30 மணியளவில் திருத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

திருமுறைகள் ஓதப்பட்டு, சிவகோஷம் முழங்க தாரை தப்பட்டை, நாதஸ்வர இசையுடன் பாரம்பரிய இசை ஒலிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பக்தர்கள் வசதிக்காகவும், தேரில் வரும் சுவாமிக்கு தேங்காய், பழம் படைப்பதற்காகவும் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள 14 இடங்களில் தேர் நின்று செல்கிறது.

மேல வீதி, வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி வழியாகச் சென்று மீண்டும் நிலையை அடைகிறது.

மாலை நேரத்தில் தேர் மண்டபத்தில் இருந்து தியாகராஜர், கமலாம்பாள் புறப்பட்டு கோவிலை சென்றடையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த தேரோட்டத்தை காண திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தஞ்சாவூருக்கு திரண்டுள்ளனர்.

சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA