சூடம்மாள் கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் அம்மன் சிலை மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு
தேனி, 27 ஏப்ரல் (ஹி.ச.) தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் சித்திரை மாதத்தில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும். இது
Sudammal Temple


தேனி, 27 ஏப்ரல் (ஹி.ச.)

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்தி நாயக்கன்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சூடம்மாள் அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் சித்திரை மாதத்தில் அம்மன் சிலை மீது சூரிய ஒளி விழும். இது மிகவும் அரிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

அந்த வகையில், இந்த நிகழ்வு சித்திரை மாதம் 17ஆம் தேதியான இன்று நடைபெற்றது. காலையில் சூரிய ஒளி அம்மன் சிலை பட்டு ஜொலித்த நிலையில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. முதலில் அம்மனின் தலை உச்சியில் படும் சூரிய ஒளிக்கதிர் மெல்ல மெல்ல நகர்ந்து கால் பாதம் வரை செல்லும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நிகழ்கிற இந்த அரிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கோயிலில் வந்து குவிந்தனர்.

இந்நிகழ்வையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் மெய்சிலிர்த்து சாமி தரிசனம் செய்தனர். மேலும், சூரிய ஒளி சிலை மீது படும் வேளையில் வேண்டிக்கொண்டால் பக்தர்களின் வேண்டுதல்களை அம்மன் நிறைவேற்றுவார் என்ற ஐதிகம் உள்ளது. எனவே ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வின்போது தங்களது வேண்டுதல்களை பக்தியுடன் முன் வைத்தனர். சிறப்பு வழிபாட்டில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு பிரசாதமாக அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுபோன்று அரிய கோயில்கள் நிறைய இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சிக்கு முன்பு, அந்த காலத்திலேயே கட்டிடக் கலை நிபுணர்கள் ஆகம சாஸ்திரப்படி இதுபோன்ற தனித்துவமிக்க கோயில்களை கட்டியுள்ளனர். அதனால் கோயில் கட்டடக் கலையில் சிறந்து விளங்கியவர்களை ஸ்தபதிகள் என்று அழைத்தனர். இவர்கள் காலநிலை மற்றும் கோணங்களை கணித்து கோயில் கட்டுவதில் நிபுணர்களாக திகழ்ந்தனர்.

சூடம்மாள் கோயில் போன்றே, வேலூர் கோட்டையில் அமைந்துள்ள சிவன் கோயிலில் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி படும் அரிய நிகழ்வு நடைபெறும்.

அதே போல், காட்டுமன்னார் கோயில் அருகேயுள்ள கானாட்டம்புலியூரில் வருடத்திற்கு ஒருமுறை சிவன் சிலை மீது சூரிய ஒளி படுகிற கோயில் அமைந்திருக்கிறது.

Hindusthan Samachar / ANANDHAN