Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 27 ஏப்ரல் (ஹி.ச)
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கேன் குடிநீர் பயன்பாடு மாநிலம் முழுவதும் உயர்ந்துள்ளது.
இதையடுத்து, குடிநீரின் தரத்தை உறுதி செய்ய தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை கடுமையான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து தரமற்ற கேன் குடிநீர் தயாரிப்பு மற்றும் விற்பனை குறித்த புகார்கள் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத குடிநீர் ஆலைகள் மற்றும் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கேன் குடிநீரில் நிறுவனம் மற்றும் உற்பத்தியாளர் பெயர், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, உணவு பாதுகாப்புத் துறை (FSSAI) உரிமம் போன்ற விவரங்கள் கட்டாயமாக குறிப்பிடப்பட வேண்டும்.
மேலும், கேன்களை நேரடி சூரிய ஒளியில் வைக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், கேன்களை 30 முறைக்கு மேல் மறுசுழற்சி செய்யக் கூடாது.
கேன்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும். பழைய கேன்களில் தண்ணீர் நிரப்பி விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
விதிமுறைகளை மீறும் கடைகள் மற்றும் குடிநீர் ஆலைகளுக்கு தலா ₹5,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து புகார்கள் வரும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒரு லிட்டர் குடிநீரில் கால்சியம் 10–75 மில்லிகிராம் மற்றும் மெக்னீசியம் 5–30 மில்லிகிராம் அளவில் இருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ