Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி ச.)
சென்னையில் தனியாக வசித்து வந்த 76 வயது மூதாட்டி மீது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புளியந்தோப்பு கே.எம். கார்டன் பகுதியில் வசித்து வரும் மூதாட்டிக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இவரது மகள் தினமும் தாயின் வீட்டிற்கு சென்று குளிக்க வைத்து, உணவு அளித்து பராமரித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று மாலை வழக்கம்போல் மகள் தாய் வீட்டிற்கு சென்றபோது, மூதாட்டியின் உடல்நிலையை பார்த்து சந்தேகமடைந்தார். குறிப்பாக, அவரது பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கேட்டபோது, கடந்த 26ஆம் தேதி மாலை வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 57 வயதான பிளம்பர் மருதப்பன் வீட்டிற்குள் நுழைந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக மூதாட்டி தெரிவித்தார்.
இதையடுத்து, மகள் உடனடியாக தாயை எழும்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தார். பின்னர், புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் பேரில் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த குற்றவாளி மருதப்பனை, நேற்று இரவு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ