கும்மிடிப்பூண்டி அருகே தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலி- 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை
திருவள்ளூர், 28 ஏப்ரல் (ஹி.ச.) திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் ச
சிப்காட்


திருவள்ளூர், 28 ஏப்ரல் (ஹி.ச.)

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் எத்தனால் தயாரிப்பு தொழிற்சாலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.

தொழிற்சாலையில் உள்ள தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் நேற்று மாலை 5 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென விஷவாயு தாக்கியதால், 5 பேருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக தொழிற்சாலை நிர்வாகம் அவர்களை மீட்டு மஞ்சங்கரணையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது.

இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய் மாலிக் (26) என்பவர் ஆபத்தான நிலையில் இருந்ததால், மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பாதிரிவேடு காவல்துறையினர், உயிரிழந்த தொழிலாளியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், மூச்சுத் திணறலுக்கு உள்ளான மற்ற 4 தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிரிவேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த விஷவாயு விபத்து அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P