Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
சென்னை உயர்நீதிமன்றம், அமைச்சர் கே. என். நேரு மீது வழக்குப்பதிவு செய்ய எந்தத் தெளிவான உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
நகராட்சி நிர்வாகத் துறையில் அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசும், அமைச்சர் நேருவும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
இந்த மனுக்களின் விசாரணையை நீதிமன்றம் ஜூன் மாதம் நான்காவது வாரத்துக்கு தள்ளிவைத்தது.
முன்னதாக, நகராட்சி நிர்வாகத் துறையில் 2,538 உதவி மற்றும் இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களில் நியமனம் செய்ய ரூ.634 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து, தமிழக டி.ஜி.பி.க்கு அமலாக்கத் துறை அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக் கோரி, அதிமுக எம்.பி. இன்பதுரை மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, இன்பதுரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தாக்கல் செய்துள்ளார்.
அந்த வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த வழக்குகளை தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு விசாரித்து வருகிறது.
வழக்குப்பதிவு செய்ய உத்தரவு வழங்கும் முன் தனது தரப்பு வாதங்களை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அமைச்சர் நேரு தரப்பு வாதம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இன்பதுரை தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் அதேபோல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ