Enter your Email Address to subscribe to our newsletters

லடாக், 28 ஏப்ரல் (ஹி.ச.)
லடாக் யூனியன் பிரதேசத்தில் நிர்வாக வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், மேலும் 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம், இதுவரை லே மற்றும் கார்கில் என 2 மாவட்டங்களைக் கொண்டிருந்த லடாக், இனி மொத்தம் 7 மாவட்டங்களைக் கொண்ட யூனியன் பிரதேசமாக உயர்ந்துள்ளது.
லடாக் துணைநிலை ஆளுநர் தலைமையில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி, லே மாவட்டத்திலிருந்து நுப்ரா, ஷாம், சாங்தாங் ஆகிய 3 புதிய மாவட்டங்களும், கார்கில் மாவட்டத்திலிருந்து ஜான்ஸ்கர் மற்றும் ட்ராஸ் ஆகிய 2 புதிய மாவட்டங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய மாவட்டங்களின் தலைமையகங்களாக நுப்ராவிற்கு டிஸ்கிட், ஷாமிற்கு கால்ட்ஸே, சாங்தாங்கிற்கு நியோமா, ஜான்ஸ்கருக்கு பதும், ட்ராஸிற்கு ட்ராஸ்–ரன்பிர்புரா ஆகிய இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பரந்த நிலப்பரப்பு, மலைப்பாங்கான நில அமைப்பு மற்றும் தொலைதூர கிராமங்கள் காரணமாக, லடாக்கில் நிர்வாக சேவைகளை மக்கள் வசிக்கும் இடங்களுக்கே கொண்டு செல்ல வேண்டிய அவசியம் நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இந்த புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவதன் மூலம், அரசுத் திட்டங்கள் விரைவாக செயல்படுத்தப்படுவதோடு, அடிப்படை வசதிகள், சாலை, மருத்துவம், கல்வி உள்ளிட்ட சேவைகள் மேலும் எளிதாக கிடைக்கும்.
மேலும், எல்லைப்புற பகுதிகளில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இந்த நடவடிக்கை, சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளூர் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு இந்த அறிவிப்பு முக்கியமான பதிலாக அமைந்துள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P