மணல் கொள்ளையை தடுத்த இளைஞர் மீது கொலைவெறித் தாக்குதல்- ரத்தக் காயங்களுடன் வெளியிட்ட வீடியோ வைரல்
மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.) மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூரில், சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற இளைஞர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதுரகிரி மலையில் உருவாகும் கமண்டல நத
தாக்குதல்


மதுரை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே குராயூரில், சட்டவிரோத மணல் கொள்ளையைத் தடுக்க முயன்ற இளைஞர் மீது மர்ம கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சதுரகிரி மலையில் உருவாகும் கமண்டல நதி, குராயூர் வழியாகப் பாய்கிறது. இந்த நதிப்படுகையில், குராயூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து சட்டவிரோதமாக மணல் அள்ளி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை காவல்துறையிடம் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னம்பட்டி பகுதியில் மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று குராயூர் வழியாக சென்றுள்ளது. இதைக் கண்ட குராயூரைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள், லாரியை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.

அப்போது, பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்து, பிரகாஷை சரமாரியாக தாக்கியுள்ளது.

உயிர் தப்பிக்க பிரகாஷின் நண்பர்கள் அங்கிருந்து ஓடினர். இந்த தாக்குதலில், பிரகாஷின் தலை மற்றும் கையில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டன. பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் லாரியுடன் தப்பிச் சென்றது.

படுகாயமடைந்த பிரகாஷ், விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

வெட்டு காயங்களுடன், ரத்தம் வழிந்த நிலையில் அவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சட்டவிரோத மணல் கொள்ளை குறித்து பலமுறை ஆதாரங்களுடன் புகார் அளித்தும், கள்ளிக்குடி காவல் நிலைய போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

காவல்துறையின் அலட்சியமே இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு காரணம் எனவும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மணல் கொள்ளையை தடுக்க முயன்ற இளைஞர் மீது நடத்தப்பட்ட இந்த கொலைவெறித் தாக்குதல், குராயூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam