Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 28 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டத்தில் கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இதனால் முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட மாவட்ட வனபகுதிகளில் உள்ள நீர்நிலைகள் வறண்டு வருகின்றன.
குறிப்பாக முதுமலை புலிகள் காப்பகத்தின் நீர் ஆதாரங்களில் ஒன்றாக விளங்கும் சீகூர் ஆறு தண்ணீர் வறண்டதால் சிங்காரா மற்றும் சீகூர் வன பகுதியில் உள்ள வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.
சீகூர் ஆற்றை போல ஆனைக்கட்டி ஆறும் வறண்டது. இதனிடையே கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் முதுமலை புலிகள் காப்பகத்தில் 3 யானைகள் உயிரிழந்தன. இதனையடுத்து ஆறுகள் வறண்டது.
அதனை தொடர்ந்து முதுமலை புலிகள் காப்பக நிர்வாகத்தின் சார்பில் நீலகிரி மாவட்ட மின்வாரிய அதிகாரிகளுக்கு உடனடியாக இமெயில் மூலம் வனவிலங்குகளுக்காக தண்ணீர் திறக்குமாறு அவசர கடிதம் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உதகை அருகே உள்ள காமராஜர் சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அந்த நீர் இன்று காலை சீகூர் ஆற்று வழியாக வாழைத்தோட்டம், மாவனல்லா, சீகூர் நீர்வீழ்ச்சி வழியாக ஓட தொடங்கியது. இதனால் வனவிலங்குகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு நீங்கி உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN