Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி , 28 ஏப்ரல் (ஹி.ச.)
உலகில் அதிக ராணுவச் செலவு மேற்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 5-வது இடத்தைப் பெற்றுள்ளது.
2025-ஆம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளன.
இந்த 5 நாடுகள் சேர்த்து உலக ராணுவச் செலவினத்தின் சுமார் 58 சதவீதத்தை வகிக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 1.68 டிரில்லியன் டாலராகும்.
உலக நாடுகளின் மொத்த ராணுவச் செலவு 2025-ஆம் ஆண்டில் 2,887 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் ராணுவச் செலவு 2025-ஆம் ஆண்டில் 92.1 பில்லியன் டாலராக பதிவாகியுள்ளது.
உலகளாவிய ராணுவச் செலவில் இந்தியாவின் பங்கு 3.2 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் ராணுவச் செலவு 8.9 சதவீதம் அதிகரித்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷன் நடவடிக்கைகளின் போது, ஆயுதப்படைகள் அவசர அடிப்படையில் பல்வேறு ஆயுதங்களை கொள்முதல் செய்ததாக கூறப்படுகிறது.
இதுவும் பாதுகாப்புச் செலவு அதிகரிக்க காரணமாக உள்ளது.
பாதுகாப்புக்கு ரூ.7.85 லட்சம் கோடி
2026-27 மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கு ரூ.7.85 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ரூ.2.19 லட்சம் கோடி புதிய ஆயுதங்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வாங்குவதற்காக பயன்படுத்தப்பட உள்ளது.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுடன் நிலவும் எல்லைப் பதற்றங்கள் காரணமாக இந்தியாவின் பாதுகாப்புச் செலவு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
ஆயுத இறக்குமதி குறைப்பு
இந்தியா தனது ஆயுத இறக்குமதியை குறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
2016-20 மற்றும் 2021-25 காலகட்டங்களுக்கிடையில் ஆயுத இறக்குமதி 4 சதவீதம் குறைந்துள்ளது.
இருப்பினும் உலகளாவிய ஆயுத இறக்குமதியில் 8.2 சதவீத பங்குடன் இந்தியா இன்னும் 2-வது இடத்தில் உள்ளது.
மேலும், ரஷியாவை சார்ந்திருப்பதை இந்தியா குறைத்து வருகிறது.
2011-15 காலகட்டத்தில் 70 சதவீதமாக இருந்த ரஷியாவின் பங்கு தற்போது 40 சதவீதமாக குறைந்துள்ளது.
தற்போது பிரான்ஸ், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு முக்கிய ஆயுத வழங்குநர்களாக உருவெடுத்துள்ளன.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA