தமிழகத்தில் குடிநீர் கேன்களுக்கு புதிய கட்டுப்பாடு - 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பு
தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் குடிநீர் விநியோகத்தில் தரநிலையை உறுதிப்படுத்தும் நோக்கில், தரமற்ற மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத குடிநீர் கேன்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளத
குடிநீர் கேன்


தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் குடிநீர் விநியோகத்தில் தரநிலையை உறுதிப்படுத்தும் நோக்கில், தரமற்ற மற்றும் விதிமுறைகளை பின்பற்றாத குடிநீர் கேன்களை பயன்படுத்துவோருக்கு கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக உணவு பாதுகாப்புத் துறை முடிவு செய்துள்ளது.

இதன்படி, 30 முறைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட குடிநீர் கேன்களை தொடர்ந்து பயன்படுத்தினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

தமிழகத்தில் வீடுகள், அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல இடங்களில் 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

இந்நிலையில், பல நிறுவனங்கள் ஒரே கேனை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி வருவதாகவும், இதனால் பொதுமக்களின் உடல்நலனுக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பிளாஸ்டிக் கேன்கள் நீண்டகாலம் பயன்படுத்தப்படும்போது, அவற்றின் தரம் குறையக்கூடும்.

குறிப்பாக, அதிக முறை மீள்பயன்பாடு காரணமாக கேன்களில் சிராய்ப்பு, விரிசல் மற்றும் நுண்ணுயிர் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனால் குடிநீரின் தரம் பாதிக்கப்படுவதோடு, அதை அருந்தும் மக்களின் உடல்நலத்திற்கும் பாதிப்பு ஏற்படலாம்.

இதையடுத்து, ஒரு குடிநீர் கேன் அதிகபட்சமாக 30 முறை மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்று தமிழக உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு மேல் பயன்படுத்தப்படும் கேன்கள் தரமற்றவையாக கருதப்படும். இந்த விதிமுறையை மீறும் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கேன்களின் பயன்பாட்டு எண்ணிக்கையை கண்காணிக்கும் வகையில், ஒவ்வொரு கேனிலும் அதன் பயன்பாட்டு விவரங்களை பதிவு செய்யும் நடைமுறையும் கட்டாயமாக்கப்பட உள்ளது.

இதன் மூலம் தரமற்ற கேன்கள் சந்தையில் புழக்கத்தில் இருப்பதை தடுக்க முடியும்.

பொதுமக்களும் குடிநீர் கேன்களை வாங்கும் போது, கேனின் தரம், சுத்தம் மற்றும் பயன்பாட்டு நிலையை கவனமாக பரிசோதிக்க வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam