Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாட்டிலேயே முன்னணியில் இருப்பதாகவும், இது திராவிட மாடல் ஆட்சியின் திட்டமிட்ட முன்னேற்றத்தின் விளைவு என்றும் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில்,
கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாடு தொடர்ந்து இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை பதிவு செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் ஒரு மாநிலம், இத்தகைய வேகத்தில் தொடர்ந்து வளர்வது இந்திய அளவிலேயே அல்ல, உலகளவிலும் அரிதானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வளர்ச்சி இயல்பாக ஏற்பட்டதல்ல; திட்டமிட்ட செயல்பாடு, கடின உழைப்பு மற்றும் தொலைநோக்கு நிர்வாகத்தின் பலன் என அமைச்சர் கூறியுள்ளார்.
மேலும், திமுக ஆட்சியின் முந்தைய காலங்களிலும் இதேபோன்ற வலுவான பொருளாதார வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக முன்னெடுத்து வருகிறார் என்றும், முதலீடு, தொழில் மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சியை மையமாகக் கொண்ட இந்தப் பாதை அடுத்த ஐந்து ஆண்டுகளிலும் தொடரும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுங்க வரி (Tariffs) போன்ற வெளிப்புற சவால்கள் இல்லையெனில், தமிழ்நாட்டின் வளர்ச்சி விகிதம் மேலும் அதிகமாக இருந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு வளர்கிறது, தமிழ்நாடு வழிகாட்டுகிறது, தமிழ்நாடு தொடர்ந்து வெல்லும் என்று அமைச்சர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P