சூரனை வதம் செய்த திருசெந்தூர் முருகன் கோயிலில் த.வெ.க தலைவர் விஜய் சுவாமி தரிசனம்!
தூத்துக்குடி, 28 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 7 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து தங்களது ஜனந
TVK Vijay


தூத்துக்குடி, 28 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக விறுவிறுப்பாக நடைபெற்றது.

காலை 7 மணி முதல் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் ஆர்வமுடன் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

இந்த வாக்குப்பதிவில் இதுவரை இல்லாத அளவுக்கு 85.15 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் நேற்று பதிவான வாக்குகள், வரும் மே 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

தமிழக அரசியல் முடிவை எதிர்பார்த்து வேட்பாளர்கள், வாக்காளர்கள் என அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று (28-04-26) அதிகாலையிலேயே பட்டு வேட்டி சட்டை அணிந்து திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் விளங்குகிறது.

இந்த கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை சாமி தரிசனம் செய்து வரும் நிலையில், இன்று தவெக தலைவர் விஜய் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

நேற்று நள்ளிரவு 11 மணிக்கு மேல் சென்னையில் இருந்து தனிவிமானம் மூலம் மதுரைக்கு சென்ற விஜய், அங்கிருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் திருச்செந்தூருக்கு சென்றுள்ளார்.

அதனை தொடர்ந்து பட்டு வேட்டி, சட்டை அணிந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்றார்.

இன்று அதிகாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்பட்டதை தொடர்ந்து, நடைபெற்ற சிறப்பு தரிசனமான விஸ்வரூப தரிசனத்தை விஜய் கண்டு களித்தார்.

அதனை தொடர்ந்து கடற்கரைக்கு சென்றும் வழிபாடு நடத்தினார்.

இதனையடுத்து அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

அப்போது அவரது தொண்டர்களும் பக்தர்களும் ஏராளமானோர் அவரை சூழ்ந்தனர்.

அப்போது தொண்டர்கள் அவருக்கு முருக வேல் கொடுத்தனர்.

அதனை வாங்கிய விஜய், தொடர்ந்து சாமி தரிசனம் செய்து அங்கிருந்து கிளம்பினார்.

இதையடுத்து அங்கிருந்து அவர் கிளம்பி மீண்டும் கார் மூலம் தூத்துக்குடி செல்லவுள்ளதாகவும் தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் சென்னைக்கு திரும்பவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Hindusthan Samachar / ANANDHAN