Enter your Email Address to subscribe to our newsletters

திருவண்ணாமலை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி உள்ளிட்ட நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து கோவிலின் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி சித்ரா பௌர்ணமி.
இந்த பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வந்தால் ஆண்டு முழுவதும் உள்ள 12 பௌர்ணமிக்கும் கிரிவலம் வந்ததாக பலன் கிடைக்கும், அதுமட்டும் இன்றி சித்ரா பௌர்ணமி தினத்தில் சித்தர்களும் பக்தர்களுடன் இணைந்து கிரிவலம் வருவார்கள் என்பது ஐதீகம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமிக்கு 30 முதல் 40 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கிரிவலம் வருவது வழக்கம், இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதி இரவு 9:52 மணிக்கு தொடங்கி மறுநாள் வெள்ளிக்கிழமை மே 1 ஆம் தேதி இரவு 11:58 மணி வரை கிரிவலம் வர உகந்த நேரமாக அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆகவே பக்தர்கள் வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை முழுமையாக கிரிவலம் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் கிரிவலப் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் மற்றும் அடிப்படை வசதிகள் தற்காலிக கழிப்பிடம் அமைத்தல், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தல் என பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட ஒன்பது சாலைகளிலும் 16 க்கும் மேற்பட்ட தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு தற்காலிக பேருந்து நிலையங்களில் கழிப்பிடம் மற்றும் குடிதண்ணீர் வசதிகள் ஏற்பாடுகள் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதே போன்று இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமிக்கு ஆந்திரா கர்நாடகா கேரளா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து கார் வேன் போன்ற வாகனங்களில் வருகை தருவார்கள் அவர்கள் கார் மற்றும் வேன்களை பார்க்கிங் செய்வதற்கு ஏதுவாக மாநகராட்சிக்குட்பட்ட புறவழிச் சாலைகளில் சுமார் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் கார் பார்க்கிங் வசதி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் திருவண்ணாமலை மாநகர் மற்றும் கிரிவலப் பாதை முழுவதிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் முழுவதும் கண்காணிக்கும் பணியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் மே ஐ எல் பி பூத் மற்றும் உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அதுமட்டும் இன்றி பல்வேறு இடங்களில் நிழல் பந்தல்கள் அமைக்கும் பணி மற்றும் பக்தர்கள் சிரமமின்றி கிரிவலம் செல்வதற்காக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு பணிகளையும் திருவண்ணாமலை மாநகராட்சி நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / ANANDHAN