வேதாரண்யம் அருகே மீனவர்கள் மீது தாக்குதல்,கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை
சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.) நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் செருதூரைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 25ஆம்
Velmurugan


Bbb


சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் செருதூரைச் சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 25ஆம் தேதி வேதாரண்யம் கிழக்கே சுமார் 12 கடல் மைல் தூரத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, 3 பைபர் படகுகளில் வந்த 9 பேர் அவர்களின் படகில் ஏறி கத்தியால் மிரட்டி தாக்கினர். இதில் 49 கிலோ மீன்கள் மற்றும் 100 கிலோ மீன்பிடி வலைகள் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்றனர்.

அதேபோல், அருகில் இருந்த மேலும் 2 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த 8 மீனவர்களையும் தாக்கி, ஜிபிஎஸ் கருவி, சிலிண்டர், ஸ்மார்ட்போன், 50 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

இதே கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகனின் பைபர் படகில் 5 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, மற்றொரு படகில் வந்த 3 பேர் கடலில் விரித்திருந்த வலையை அறுக்க முயன்றனர்.

இதனால் ஏற்பட்ட மோதலில் 2 பேர் தப்பியோட, ஒருவரை மீனவர்கள் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் இலங்கை காங்கேசந்துறை பகுதியைச் சேர்ந்த அயந்தன் என்பதும் தெரியவந்தது. பின்னர் அவரை கடலோர காவல் குழுமத்திடம் ஒப்படைத்தனர்.

இந்த தாக்குதலில் காயமடைந்த மீனவர்கள் நாகப்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், 2026 ஏப்ரல் 13ஆம் தேதி வரை இலங்கை கடற்படையினரால் 128 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 18 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர்களில் 30 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், ராமேஸ்வரம், மண்டபம், நாகப்பட்டினம் பகுதிகளில் வாழும் மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி உரிமையை வலியுறுத்தி வருகின்றனர்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தை காரணம் காட்டி இலங்கை அரசு மீனவர்களை கைது செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில்,

தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து நடைபெறும் தாக்குதல்களை தடுக்க இந்தியா மற்றும் இலங்கை அரசுகள் இணைந்து உடனடி நடவடிக்கை எடுத்து, கடற்கொள்ளையர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கச்சத்தீவை மீட்கும் வரை இத்தகைய பிரச்சினைகள் நீடிக்கும் என்றும், பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ