Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 28 ஏப்ரல் (ஹி.ச.)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி கட்சியின் தேர்தல் வேட்பாளர்களை நேரில் சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார்.
நடந்து முடிந்துள்ள தேர்தலைத் தொடர்ந்து, மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், இந்த ஆலோசனை கூட்டம் அரசியல் வட்டாரங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன் கட்சியின் நிலைப்பாடு, தேர்தல் பிந்தைய சூழல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, தேர்தல் நிறைவடைந்த உடனேயே, கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தினார்.
அப்போது தேர்தல் கள அனுபவங்கள், வாக்காளர் மனநிலை, தொகுதி வாரியான நிலவரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, தற்போது கட்சியின் வேட்பாளர்களை தனிப்பட்ட முறையில் சந்தித்து, ஒவ்வொரு தொகுதியிலும் நிலவும் அரசியல் சூழல், வாக்குப்பதிவு நிலவரம், முகாமைத்துவ நடவடிக்கைகள், வாக்கு எண்ணிக்கை நாளுக்கான தயாரிப்புகள் ஆகியவை குறித்து விஜய் கேட்டறிய உள்ளார்.
மேலும், வாக்கு எண்ணிக்கை நாளில் கட்சியின் முகவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்கு எண்ணிக்கை மையங்களில் கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், வெற்றி அல்லது தோல்வி என்ற இரு சூழல்களையும் எதிர்கொள்ள வேண்டிய அணுகுமுறைகள் பற்றியும் ஆலோசனைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் முதல் முறையாக தேர்தலை சந்தித்துள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இந்த ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வாக்கு எண்ணிக்கைக்கு முன் கட்சியின் ஒற்றுமையையும், அடுத்தகட்ட அரசியல் பயணத்திற்கான திட்டங்களையும் உறுதிப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமையும் என கட்சித் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam