ஒரு பள்ளிக்கு 3.11 மாணவர்கள் சேர்ப்பதா சாதனை? - அன்புமணி இராமதாஸ் கேள்வி
சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங
Anbumani


சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2026–27 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை 1.12 லட்சம் மாணவர்கள் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சேர்ந்திருப்பதாக கூறினார். இதனை சாதனையாகக் கூறுவது ஏமாற்றும் செயல் என்றும் விமர்சித்துள்ளார்.

மொத்தம் 37,554 அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் 97,737 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ள நிலையில், ஒவ்வொரு பள்ளியிலும் சராசரியாக 3.11 மாணவர்கள் மட்டுமே சேர்வது கல்வித்துறையின் வீழ்ச்சியை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சில பள்ளிகளில் ஒரு மாணவர்கூட சேராத நிலை இருக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதாகவும், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அரசு எட்ட முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், அரசு பள்ளிகளில் தரமான கல்வி மற்றும் அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதே பெற்றோர் தனியார் பள்ளிகளை நாடுவதற்கான முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார். தொடக்கக் கல்வித் துறையில் ஒரு பள்ளிக்கு சராசரியாக 3 முதல் 4 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதும், பல வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லாததும் கல்வி தரத்தை பாதிக்கிறது என அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி வழங்க வேண்டுமெனில் அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது அவசியம் என்றும், அதற்காக உட்கட்டமைப்பு மேம்பாடு, போதிய ஆசிரியர் நியமனம், கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்குதல் உள்ளிட்ட அம்சங்களை கொண்ட சிறப்புத் திட்டத்தை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ