Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
தெற்கு ரயில்வேயின் சென்னை ரயில்வே கோட்டம் 2025–26 நிதியாண்டில் சரக்கு போக்குவரத்து துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பதிவு செய்துள்ளது.
இந்த ஆண்டில் மொத்தம் ₹1,289.78 கோடி சரக்கு வருவாய் ஈட்டியதுடன், பல புதிய சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடுகள் மூலம் முக்கிய மைல்கற்களையும் எட்டியுள்ளது.
இந்த நிதியாண்டில், சென்னை ஜவஹர் டாக் துறைமுகம் இருந்து பொன்மலை (கோல்டன் ராக் பாய்லர் பிளான்ட்) பகுதிக்கு முதன்முறையாக இரும்பு குழாய்கள் ரயில் மூலம் கடத்தப்பட்டன. இது சரக்கு பட்டியலில் புதிய சேர்க்கையாக அமைந்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்த ‘கிரீன் லாஜிஸ்டிக்ஸ்’ முயற்சியாக, மான்ட்ரா எலக்ட்ரிக் மற்றும் மஹிந்திரா எலக்ட்ரிக் நிறுவனங்களின் மின்சார ஆட்டோக்கள் ரயில் மூலம் கடத்தப்பட்டன.
தடா–ரங்காபானி மற்றும் ஜோலார்பேட்டை–சால்சாப்ரா, ஜிரானியா போன்ற பாதைகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும், கொருக்குப்பேட்டை சரக்கு முனையம் இருந்து டெல்லி கோட்டத்தின் நோலி பகுதிக்கு மத்திய சேமிப்புக் கிடங்கு நிறுவனம் தேவைக்காக கொள்கலன் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.
முன்னர் இழந்த சரக்கு சேவைகளையும் சென்னை கோட்டம் மீட்டெடுத்துள்ளது. சிங்கபெருமாள் கோவில்–பரூக்நகர் இடையே ‘ரயில் மீது லாரி’ (Truck-on-Train) சேவையின் மூலம் 430 லாரிகள் கடத்தப்பட்டன. அதேபோல், காமராஜர் துறைமுகம் இருந்து தோரணகல்லு மற்றும் மேச்சேரி ரோடு பகுதிகளுக்கு சுண்ணாம்புக்கல் சரக்கு போக்குவரத்து 14 மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
சரக்கு உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில், பொன்னேரி அருகே அனுப்பம்பட்டு கிராமத்தில் ‘கதி சக்தி மல்டி மாடல் சரக்கு முனையம்’ உருவாக்கப்பட்டுள்ளது.
சிக்கல் மல்டிமோடல் ரயில் டிரான்ஸ்போர்ட் லிமிடெட் நிறுவனம் அமைத்த இந்த முனையத்திலிருந்து 45 BLCA வேகன்களுடன் முதல் சரக்கு ரயில், 1,389 கி.மீ தூரம் பயணித்து சக்ரதர்பூர் கோட்டத்தில் உள்ள மகாவீர் ஃபெரோ அலாய்ஸ் நிறுவனத்துக்கு சென்றடைந்தது.
இந்த சாதனைகள் அனைத்தும் சென்னை ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்து திறனை மேம்படுத்தும் முயற்சிகளையும், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் வாடிக்கையாளர் மைய சேவைகளை செயல்படுத்தும் அணுகுமுறையையும் வெளிப்படுத்துகின்றன. தொழில் வளர்ச்சிக்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்பதில் சென்னை கோட்டம் உறுதியாக உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ