Enter your Email Address to subscribe to our newsletters

தஞ்சாவூர், 29 ஏப்ரல் (ஹி.ச.)
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் தருமபுரம் ஆதீனத்திற்குச் சொந்தமான அறம் வளர்த்த நாயகி அம்மன் உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
இதேபோல் இந்த ஆண்டு கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. வரும் மே மாதம் 3ம் தேதி வரை 13 நாள் திருவிழா நடைபெறுகிறது.
விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (ஏப்ரல் 29) காலை தொடங்கியது. முன்னதாக சுவாமி, அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் தேரில் அமர்ந்து பஞ்ச மூர்த்திகளுடன் திருவையாறு நான்கு வீதிகளிலும் தேர் வீதி உலா வந்தது.
பக்தர்கள் ஐயாறப்பா போற்றி, அறம் வளர்த்த நாயகியே போற்றி என கோஷங்களுக்கு இடையே வடம் பிடித்து முக்கிய வீதிகள் வழியாகத் தேரை இழுத்து வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வரும் இரண்டாம் தேதி சப்தஸ்தான விழா நடைபெற உள்ளது.
இவ்விழா ஏற்பாடுகளை 27-வது தருமபுர ஆதினம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான கட்டளை விசாரணை ஸ்ரீமத் சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b