Enter your Email Address to subscribe to our newsletters

நீலகிரி, 29 ஏப்ரல் (ஹி.ச.)
நீலகிரி மாவட்டம் ஊட்டி லவ்டேல் பகுதியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் லாரன்ஸ் பள்ளியானது வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் பயிலும் ஒரு முதன்மையான கல்வி நிறுவனமாகும்.
நீலகிரி மலைகளில் சுமார் 750 ஏக்கர் பரப்பளவில் சர் ஹென்றி மாண்ட்கோமெரி லாரன்ஸ் என்பவர் இப்பள்ளியை நிறுவினார்.
இப்பள்ளியின் 168-வது நிறுவன நாள் விழா நேற்று
( ஏப்ரல் 28) தொடங்கியது.3 நாட்கள் நடைபெறும் இந்த விழா நாளை (ஏப்ரல் 30) நிறைவு பெறுகிறது.
இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நாளை நிறைவு நாளில் (ஏப்ரல் 30) நடைபெறவுள்ளன.
இதில், தமிழக ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்துவரும் கேரள ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் பங்கேற்கிறார்.
இதற்காக, அவர் இன்று கேரளாவில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார்.
இரவு அங்கேயே தங்கும் ஆளுநர், நாளை காலை கோத்தகிரி வழியாக சாலை மார்க்கமாக ஊட்டி செல்கிறார்.
நாளை காலை 10:00 மணியளவில் பள்ளிக்கு வருகை தரும் ஆளுநர்,அப்பள்ளி மாணவர்களின் பாரம்பரியமான 'கலர்ஸ்' அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
பின்னர் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு ஆளுநர் பதக்கங்களையும் விருதுகளையும் வழங்குகிறார்.
இந்த நிகழ்வில் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் சிறப்பு உரை ஆற்றவுள்ளார்.
Hindusthan Samachar / vidya.b