Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 29 ஏப்ரல் (ஹி.ச.)
பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை முடக்கியுள்ள தனது சொத்துகளை விடுவிக்கக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் குறிப்பிடத்தக்க அம்சமாக, தயாநிதி அழகிரிக்கு பதிலாக அவரது தந்தை மு.க.அழகிரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளார்.
அதில், மனுதாரர் தயாநிதி அழகிரி அறிவுசார் இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பகுதியளவு பக்கவாதத்தாலும் அவதிப்பட்டு வருவதால், பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திடுவதற்கான மருத்துவத் தகுதி தற்போது அவருக்கு இல்லை.
எனவே, அவரது இயற்கையான பாதுகாவலராக நான் இந்தப் பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்கிறேன் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத கிரானைட் குவாரி மற்றும் அதனுடன் தொடர்புடைய பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக, தயாநிதி அழகிரி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்களின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த சொத்து முடக்க நடவடிக்கையை ரத்து செய்யவும், முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வயது வந்த ஒருவருக்குப் பதிலாக அவரது தந்தை, உடல்நிலை காரணத்தைக் குறிப்பிட்டு நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருப்பது இந்த வழக்கில் முக்கிய திருப்பமாகக் கருதப்படுகிறது.
இந்த மனு விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P