வெயிலின் தாக்கத்தைக் குறைக்க சிக்னல்களில் 'பசுமைப் பந்தல்' - தூத்துக்குடி மாநகராட்சி ஏற்பாடு
தூத்துக்குடி, 29 ஏப்ரல் (ஹி.ச.) தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. தூத்துக்குடியிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், முக்கிய சந்திப்புக
ஹி.ச


தூத்துக்குடி, 29 ஏப்ரல் (ஹி.ச.)

தமிழகத்தில் கோடை வெயில் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

தூத்துக்குடியிலும் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொதுமக்கள், முக்கிய சந்திப்புகளில் உள்ள சிக்னல்களில் காத்திருக்கும்போது கடும் வெப்பத்தால் அவதிப்பட்டு வந்தனர்.

இதனைக் கருத்தில் கொண்டு, சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி 'பசுமைப் பந்தல்' அமைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இந்த நிலையில், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி, மாநகரின் முக்கிய போக்குவரத்துச் சந்திப்புகளில் நிழல் தரும் வகையில் தற்காலிகப் பசுமைப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முதற்கட்டமாக தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் சந்திப்பு, பழைய மாநகராட்சி அலுவலகச் சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு மற்றும் எட்டயபுரம் சாலை சந்திப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களின் நான்கு புறங்களிலும் இந்தப் பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாகனங்கள் சிக்னலுக்காகக் காத்திருக்கும் இடத்தில் உயரமாகப் பிணைக்கப்பட்டுள்ள இந்தப் பந்தல்கள், சூரிய வெப்பம் நேரடியாகத் தாக்காதவாறு நிழல் தருகின்றன.

இது குறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,

வெயில் காலத்தில் சிக்னலில் 60 முதல் 90 விநாடிகள் காத்திருப்பது பெரும் சவாலாக இருந்தது.

தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்தப் பசுமைப் பந்தல் மிகுந்த குளிர்ச்சியையும், நிழலையும் தருகிறது.

மாநகராட்சி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமிக்கச் செயல் பாராட்டுக்குரியது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Hindusthan Samachar / vidya.b