எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் - அமெரிக்க அதிபர் டிரம்ப்
வாஷிங்டன், 29 ஏப்ரல் (ஹி.ச.) அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்தடைந்தார். நேற்று மாலை வாஷிங்டன் வந்தடைந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி
எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை அனுமதிக்க மாட்டோம் - அமெரிக்க  அதிபர் டிரம்ப்


வாஷிங்டன், 29 ஏப்ரல் (ஹி.ச.)

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் 4 நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்தடைந்தார்.

நேற்று மாலை வாஷிங்டன் வந்தடைந்த மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோருக்கு வெள்ளை மாளிகையின் தெற்கு புல்வெளியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா டிரம்ப் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர்.

ராணுவ மரியாதையுடன் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்சியில், இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன. பின்னர் மன்னர் சார்லஸ், அமெரிக்க படைவீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

வரவேற்பு நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதிபர் டிரம்பும் மன்னர் சார்லஸும் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின்போது, பாதுகாப்பு, வர்த்தகம், காலநிலை மாற்றம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் தற்போதைய சூழல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பிற்கு பின்னர் அதிபர் டிரம்ப் பேசியதாவது:

நாங்கள் தற்போது மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நாங்கள் எதிரியை ராணுவ ரீதியாகத் தோற்கடித்துவிட்டோம்.

அந்த எதிரி மீண்டும் தலைதூக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த விஷயத்தில் என்னை விடவும் பிரிட்டன் மன்னர் சார்லஸ் திட்டவட்டமாக இருக்கிறார். எதிரியின் கையில் அணு ஆயுதம் கிடைப்பதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.

அமெரிக்க பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில் மன்னர் சார்லஸ், அதிபர் டிரம்ப் பங்கேற்கின்றனர். இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் நிர்வாகம் கடைப்பிடித்து வரும் கடுமையான நிலைப்பாடு மற்றும் அண்மைக்காலமாக இங்கிலாந்தின் சில கொள்கைகள் குறித்து அதிபர் டிரம்ப் தெரிவித்த விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது கவனிக்கத்தக்கது. எனவே, இரு தரப்பு உறவுகளில் நிலவும் சவால்களை களைந்து, புதிய ஒத்துழைப்பை உருவாக்கும் முயற்சியாக இந்த சந்திப்பு பார்க்கப்படுகிறது.

தனது 4 நாள் பயணத்தின் ஒரு பகுதியாக, மன்னர் சார்லஸ் அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

மேலும், பிலடெல்பியாவில் உள்ள சுதந்திர மண்டபத்துக்கு சென்று, அமெரிக்க சுதந்திரப் பிரகடனம் கையெழுத்தான இடத்தை பார்வையிடுகிறார். நியூயார்க்கில் நடைபெறும் அமெரிக்க-இங்கிலாந்து வர்த்தக மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார்.

இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜதந்திர உறவில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b